குறள் (Kural) - 949

குறள் (Kural) 949
குறள் #949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

பொருள்
நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

Tamil Transliteration
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal.

மு.வரதராசனார்

மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

கலைஞர்

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

பரிமேலழகர்

கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)மருந்து (Marundhu)