குறள் (Kural) - 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
பொருள்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
Tamil Transliteration
Noinaati Noimudhal Naati Adhudhanikkum
Vaainaati Vaaippach Cheyal.
மு.வரதராசனார்
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
கலைஞர்
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
பரிமேலழகர்
நோய் நாடி - மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி - பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி - பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் - அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. (காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் - நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. 'அது தணிக்கும் வாய்' என்றார். 'கழுவாயும் உள' (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை - பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.)
புலியூர்க் கேசிகன்
குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | மருந்து (Marundhu) |