குறள் (Kural) - 950

குறள் (Kural) 950
குறள் #950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

பொருள்
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.

Tamil Transliteration
Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
Appaal Naar Kootre Marundhu.

மு.வரதராசனார்

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா

நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

கலைஞர்

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.

பரிமேலழகர்

மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை.இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.)

புலியூர்க் கேசிகன்

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)மருந்து (Marundhu)