குறள் (Kural) - 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
பொருள்
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
Tamil Transliteration
Theeyala Vandrith Theriyaan Peridhunnin
Noyala Vindrip Patum.
மு.வரதராசனார்
பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
கலைஞர்
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
பரிமேலழகர்
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | மருந்து (Marundhu) |