குறள் (Kural) - 946

குறள் (Kural) 946
குறள் #946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

பொருள்
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை.

Tamil Transliteration
Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi.

மு.வரதராசனார்

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.

சாலமன் பாப்பையா

குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

கலைஞர்

அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.

பரிமேலழகர்

இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்.(அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.)

புலியூர்க் கேசிகன்

அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)மருந்து (Marundhu)