குறள் (Kural) - 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
பொருள்
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
Tamil Transliteration
Kutiyaanmai Yulvandha Kutram Oruvan
Matiyaanmai Maatrak Ketum.
மு.வரதராசனார்
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.
சாலமன் பாப்பையா
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.
கலைஞர்
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
பரிமேலழகர்
ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். (மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒருவன் மடியாண்மை மாற்ற - ஓர் அரசன் தன் சோம்பல் தன்மையை நீக்கவே ; குடி ஆண்மையுள்வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்களும் அவற்றால் விளைந்த கேடுகளும் நீங்கும். இஃது ஓரரசன் குற்றமுந் திருத்தமும். மடியாண்மை மடியை ஆளுந்தன்மை. 'குடியாண்மை' உம்மைத்தொகை.இனி, 'குடி ஆண்மையுள் வந்த குற்றம் -நெடுங்கால மாகத்தொடர்ந்து வரும் ஒரு குடியுள்ளும் அதன் தலைவரின் ஆண்மையுள்ளும் நேர்ந்த குற்றங்களால் விளைந்த கேடுகள்; மடியாண்மை - அவற்றிற்குக் கரணியமாயிருந்த சோம்பல் தன்மையை ; ஒருவன் மாற்றக் கெடும் - ஊக்கமும் பெருமுயற்சியு முள்ள ஒரு தலைவன் நீக்கியவுடன் நீங்கும்'. என்றுமாம். இதற்குக் கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்க்கு அடங்கியிருந்த சோழர்குடியில் தோன்றிய விசயாலயன், கி.பி.850 போல் தஞ்சையைக் கைப்பற்றி மீண்டும் தன் குடியுயர்வை நிலைநிறுத்தியமை, நல்லெடுத்துக்காட்டாம். குடிமைக் குற்றம் ஒற்றுமையின்மையும் உட்பகையும் சேரபாண்டியரொடு சேராமையும் .ஆண்மைக் குற்றம் போர் முயற்சியின்மை. இஃது ஓரு குடியின் குற்றமுந் திருத்தமும்.
மணக்குடவர்
குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.
புலியூர்க் கேசிகன்
ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | மடி இன்மை (Matiyinmai) |