குறள் (Kural) - 608

குறள் (Kural) 608
குறள் #608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

பொருள்
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

Tamil Transliteration
Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum.

மு.வரதராசனார்

சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

சாலமன் பாப்பையா

குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

கலைஞர்

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

பரிமேலழகர்

மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும், (மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை. அஃது அதனை உடைய அரசன் மேற்றாதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மடிமை குடிமைக்கண் தங்கின் -சோம்பல் தன்மை குடிசெய்வானிடம் அமையின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் -அது அவனைத்தன் பகைவர்க்கு அடிமையாக்கி விடும். மடிமை என்றது இங்கு அதன் விளைவாகிய கருமக் கேட்டை. குடிமை குடிசெய்யுந்தன்மை. அது இங்கு அதனையுடைய அரசனைக் குறித்தமை , ' தன்னொன்னார்க்கு ' என்பதனால் அறியப்படும். குடிசெய்தல் தன் குடியைச் செல்வம் ,இன்பம் , அறிவு , ஒழுக்கம் , ஆட்சி ,வலிமை முதலிய எல்லாவகையிலும் மேம்படச்செய்தல். பகைவர்க்கு அடிமையாதலாவது சிறைபுகுதல் அல்லது திறைசெலுத்துஞ் சிற்றரசனாதல்.

மணக்குடவர்

குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.

புலியூர்க் கேசிகன்

நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)