குறள் (Kural) - 610

குறள் (Kural) 610
குறள் #610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

பொருள்
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

Tamil Transliteration
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu.

மு.வரதராசனார்

அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

சாலமன் பாப்பையா

தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

கலைஞர்

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

பரிமேலழகர்

அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மடி இலா மன்னவன் -சோம்பலில்லாத அரசன் 'அடி அளந்தான் தாயது எல்லாம் - கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் -ஒருமிக்க அடைவான். திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்) மூவுவகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால் , அவற்றை ஊக்கமுள்ள அரசன் ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது . கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும் மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் ,அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது. வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால், திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது. இதுவே , குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம் ' என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் ,முன்னை நிகழ்ச்சி பற்றி ' அடியளந்தான் ' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற் குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும் சுடுகாடு மீட்டான் என்றும் பெயர்பெற்றிருத்தல் காண்க. ' தாஅய ' இசைநிறை யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ- ஆய் - ஆய.

மணக்குடவர்

மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)