குறள் (Kural) - 607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
பொருள்
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
Tamil Transliteration
Itipurindhu Ellunj Chol Ketpar Matipurindhu
Maanta Ugnatri Lavar.
மு.வரதராசனார்
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
சாலமன் பாப்பையா
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.
கலைஞர்
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
பரிமேலழகர்
மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர். ('இடி' என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான்', 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின் 'கேட்பர்' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
மடி புரிந்து மாண்ட உஞற்று இலவர் -சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சி ஒன்றும் மேற்கொள்ளாத அரசர் ;இடிபுரிந்து எள்ளும் சொல் கேட்பர்- அமைச்சர் கண்டித்து அறிவுரை கூறியும் அதைக்கேளாமையாற் பின்பு அவர் இகழ்ந்து கூறும் சொல்லைக் கேட்பர். சிறந்த முயற்சியே யன்றிச் சிறு முயற்சி பயன் படாதென்பார் 'மாண்ட உஞற்று' என்றார். இடி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.' புரிதல் ' இரண்டனுள், முன்னது செய்தல் ; பின்னது விரும்புதல் . தன்னிடத்திற்குற்ற முண்மையால் எதிர்த்துப்பேச வாயின்மை பற்றி ,' எள்ளுஞ் சொற் கேட்பர் ' என்றார். எள்ளுதல் உள்ளத் தொழிலேயாயினும் , ' எள்ளுஞ்சொல் ' என்றமையால் இங்கு இகழ்தலாகிய வாய்த்தொழிலைக் குறித்தது. சோம்பலால் உயர்வை இழத்தலோடு இகழ்ச்சிச் சொற்கேட்கும் இழிவையும் அடைவர் என்பது இங்குக் கூறப்பட்டது. "அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன். (குறள்.638) ஆதலின் , 'இடி' யென்னும் முதனிலைத் தொழிற்பெயரான் , நட்டாரென்பது பெற்றாம்." என்னும் பரிமேலழகர் சிறப்புரைக் குறிப்புப் பொருந்துவ தன்றாம்.அவர் கருத்துப்படி ,கழறுதலைச் செய்வாரெல்லாம் நட்டாரேயெனின் , அது அமைச்சர் இன்மையையோ அவர் கடமை தவறுதலையோ உணர்த்துதல் காண்க.
மணக்குடவர்
கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.
புலியூர்க் கேசிகன்
சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | மடி இன்மை (Matiyinmai) |