குறள் (Kural) - 606

குறள் (Kural) 606
குறள் #606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

பொருள்
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

Tamil Transliteration
Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar
Maanpayan Eydhal Aridhu.

மு.வரதராசனார்

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

சாலமன் பாப்பையா

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

கலைஞர்

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

பரிமேலழகர்

படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை. ('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மடி உடையார்- சோம்பேறிகள்; படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் -மாநிலம் முழுதுமாளும் மாபெருவேந்தரின் துணை கிட்டியவிடத்தும் ; மாண் பயன் எய்தல் அரிது-அதனாற் சிறந்த பயனடைதல் இல்லை. முயற்சியின்மையால் மாநிலமுழுதாளியரின் துணையாலும் பயனடையார் என்பதாம். உம்மை உயர்வுசிறப்பு .'மாண்பயனெய்த லரிது' என்பதால், சிறுபயனடைதல் பெறப்படும். அதுவும் அவ்வேந்தரின் துணையாலேயே வருவது என்பதும் உய்த்துணரப்படும். இக்குறட்குப் பரிமேலழகர் உரை வருமாறு;- "படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் -நிலமுழுதுமாண்டாரது செல்வந்தானே வந்தெய்திய விடத்தும் ; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது -மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதலில்லை. " உம்மை எய்தாமை விளக்கிநின்றது , ' மாண்பயன் ' பேரின்பம்.... இவ்வுரை, நிலமுழுது மாண்ட அரசனின் செல்வம் , அவன் இறந்தபின் சோம்பேறியான அவன் மகனுக்குத் பழவிறல் தாயமாக வந்ததைக் குறித்ததாயின் பொருந்துவதே.ஆயின் ,"உம்மை எய்தாமை விளக்கிநின்றது." என்று அவரே தம் உரைப் பொருத்தத்தைக் கெடுத்துக் கொண்டார். "மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தின மாயின் எய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே." என்பது (புறம்.75) இங்குக் கவனிக்கத் தக்கது.

மணக்குடவர்

பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.

புலியூர்க் கேசிகன்

நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)