குறள் (Kural) - 605

குறள் (Kural) 605
குறள் #605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

பொருள்
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

Tamil Transliteration
Netuneer Maravi Matidhuyil Naankum
Ketuneeraar Kaamak Kalan.

மு.வரதராசனார்

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

சாலமன் பாப்பையா

காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

கலைஞர்

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

பரிமேலழகர்

மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக்கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நெடுநீர் மடி மறவி துயில் நான்கும்- நீட்டிக்குந் தன்மை, சோம்பல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்- இறக்கும் நாள் நெருங்கியவர் விரும்பியேறும் மரக்கலங்களாம். நெடுநீர் என்பது விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு.மடி என்பது முயற்சிசெய்யாது சும்மாயிருக்குஞ் சோம்பல். மறவி என்பது செய்ய வேண்டியதை மறந்து விடுதல் .துயில் என்பது பகலுந்தூங்குதல் அல்லது தூக்க நிலையிலிருத்தல்.இந்நான்கும் ஊக்கமின்மையின் வகைகளாதலின் உடனெண்ணப்பட்டன.நெடுநீர் என்னுங் காலநீட்சி பற்றிய பண்புப் பெயர் அக்காலத்தில் நிகழும் செயல்மேல் நின்றது. கெடுநீர்-இறப்பு நெருங்கிய தன்மை. நெடுநீர் முதலிய நான்கும் ஊக்கமில்லார்க்கு இன்பந்தருவனபோற் காட்டிப் பின்பு மீளாத் துன்பமாகிய அழிவைத்தருவ தால், அவை வாழ்நாளெல்லை யடுத்தவர்க்கு இன்ப நீர்ச்செலவு நிகழ்த்துவதுபோற் காட்டி, அவர் விரும்பி ஏறியபின் அவரை நடுக்கடலில் வீழ்த்திவிடும் மரக்கலங்களுக்கு ஒப்பாகும் என்றார். ' காமக்கலன், என்பதால் விரும்பியேறுதல் பெறப்படும். இத்தொடர்க்கு விரும்பிப்பூணும் அணிகலன்கள் என்று உரைப்பது பொருந்தாது .பொருந்த வேண்டுமாயின் , எரிமருந்து கலந்த அணிகள் என்று கொள்ள வேண்டும். இக்குறளில் அமைந்துள்ளது உருவகவணியாம்

மணக்குடவர்

விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம். காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

புலியூர்க் கேசிகன்

சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)