குறள் (Kural) - 604

குறள் (Kural) 604
குறள் #604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

பொருள்
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

Tamil Transliteration
Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku.

மு.வரதராசனார்

சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

சாலமன் பாப்பையா

சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

கலைஞர்

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

பரிமேலழகர்

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு -சோம்பலில் வீழ்ந்து சிறந்த முயற்சி யில்லாதவராய் வாழ்வார்க்கு - குடிமடிந்து குற்றம் பெருகும். - குடியுங் கெட்டுக் குற்றமும் பெருகும் 'உஞற்று' என்னும் சொல்வரலாறு 592-ஆம் குறளுரையிற் கூறப்பட்டது. குற்றம் மேற் கூறப்படும்.

மணக்குடவர்

குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.

புலியூர்க் கேசிகன்

சோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)