குறள் (Kural) - 603

குறள் (Kural) 603
குறள் #603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

பொருள்
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

Tamil Transliteration
Matimatik Kontozhukum Pedhai Pirandha
Kutimatiyum Thanninum Mundhu.

மு.வரதராசனார்

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

கலைஞர்

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

பரிமேலழகர்

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் - அவன் தன்னினும் முந்துற அழியும். (அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி -அழிக்கும் இயல்புள்ள சோம்பலைத் தன்னிடங்கொண்டொழுகும் அறிவிலி பிறந்தகுடி; தன்னினும் முந்து மடியும் -அவனினும் முற்பட அழிந்து போம். அழிவு தருவதை உடன்கொண்டொழுகலாற் ' பேதை ' என்றும் ,அவனாற் காக்கப்படாமையால் அவனினும் முந்துற வழியும் என்றும் ,கூறினார். முந்துற வழிதலாவது அவனொடு தொடர்பின்றி மறைதல்.

மணக்குடவர்

நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)