குறள் (Kural) - 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
பொருள்
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Matiyai Matiyaa Ozhukal Kutiyaik
Kutiyaaka Ventu Pavar.
மு.வரதராசனார்
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.
கலைஞர்
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக. ('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
குடியைக் குடியாக வேண்டுபவர் -தாம்பிறந்த குடியை மேன்மேலுயரும் நற் குடியாகச்செய்தலை விரும்புவர்; மடியை மடியாக ஒழுகல் - முயற்சியின்மையில் முயற்சியின்மை கொண்டு ஒழுகுக. வெளிப்படையுங் குறிப்புமான எதிர்மறையின் எதிர்மறை உடன்பாடாதல் பற்றி, இன்மையின் இன்மைவேண்டும், அல்லது வறுமையின் வறுமை வேண்டும் என்று சொல்வது போல், ' மடியை மடியாக வொழுகல் ' என்றார். அது இடைவிடாது முயற்சி செய்க என்று பொருள் படுவதே. முயற்சியால் தாம் உயரவே ,தம் குடியுயரும் என்பது கருத்து. மணக்குடவர் ' மடியா ' என்பதைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு , 'மடிசெய்தலை மடித்தொழுக' எனவுரைப்பர்.அதுவும் பொருள் கெடாமையின் குற்ற மன்றாம்.
மணக்குடவர்
மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர். இது சோம்பாமை வேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | மடி இன்மை (Matiyinmai) |