குறள் (Kural) - 601

குறள் (Kural) 601
குறள் #601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

பொருள்
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

Tamil Transliteration
601 Kutiyennum Kundraa Vilakkam Matiyennum
Maasoora Maaindhu Ketum.

மு.வரதராசனார்

ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

சாலமன் பாப்பையா

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

கலைஞர்

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

பரிமேலழகர்

குடி என்னும் குன்றா விளக்கம் - தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் - ஒருவன் மடியாகிய இருள் அடர நந்திப்போம். (உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள் பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா விளக்கம்' என்றும், தாமத குணத்தான் வருதலின், 'மடியை' மாசு என்றும், அஃது ஏனையிருள் போலாது அவ் விளக்கத்தைத் தான் அடர்ந்து மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்' என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லையாதல்.

ஞா.தேவநேயப் பாவாணர்

குடி என்னும் குன்றா விளக்கம் -தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு ; மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் -சோம்பல் என்னும் தூசி அடைவதால் ஒளிமழுங்கிக் கெடும். அரண்மனைப் பள்ளியறைகளிலும் கோயில்களின் உண்ணாழிகைகளிலும் இரவும் பகலும் ஒளியிருத்தற் பொருட்டு , நுந்தா விளக்கும் நந்தா விளக்கும் வைப்பது பண்டை வழக்கம். நுந்தா விளக்கு என்பது தூண்டாவிளக்கு.அது தீண்டாவிளக்கு எனவும் படும்.தீண்டுவது திரியை. திரி எரிவது எண்ணெயால்.ஆகவே நுந்தாவிளக்கு அல்லது தீண்டாவிளக்கு என்பது கோழிமுட்டை அல்லது எலுமிச்சம்பழ அளவாக விருந்து பேரொளிவிடும் பெறற்கருமணியாம். அது மணிவிளக்கு எனவும்படும்.நுந்துதல் தூண்டுதல்(தீண்டுதல்).நுந்தா விளக்கு என்பது நந்தாவிளக்கு என்றும் திரியும். கோயில்களில் இரவும் பகலும் எரிவது எண்ணெய் விளக்கு.அதன் திரி அடிக்கடி தீண்டப்படுவதாயினும் அவியாது எப்போதும் எரிந்து கொண்டேயிருப்பதால், நந்தா விளக்கு எனப்படும்.இதில் நந்துதல் கெடுதல்(அவிதல்). 'மாசூர ' என்றதினால் இங்குக் குன்றா விளக்கம் என்றது நுந்தா விளக்கை.மாசு தூசி. தூளி - தூசி. "நெரிந்தன மாசுண நெற்றியே" (தக்கயாகப். 524) தூசி மேற்புறம் முழுதும் படிந்து விட்டால் மணி ஒளி தராது.மாசிலாமணி என்னும் வழக்கைநோக்குக. மாசு புறக்குற்றம்; மறு அகக்குற்றம். "மண்ணி அறிப மணிநலம்" (நான்மணி.3) "மண்ணுறு மணியின்" (புறம்.147). குடி யென்றது இங்குச் சேரசோழ பாண்டியர் குடிகள் போல தொன்றுதொட்டுத் தொடர்ந்து வந்து தன்னுட் பிறந்தவரை விளக்கும் தொல்வரவுக் குடும்பத்தை. இருளுக்கு ஒளியை மாய்க்கும் ஆற்றலின்மையின், 'இருளடர நந்திப்போம் ' என்று பரிமேலழகர் கூறியது பொருந்தாது.இக்குறளில் வந்துள்ளது உருவகவணி. உண்ணாழிகை என்பது தெய்வப் படிமையிருக்குங் கருவறை - கருப்பக்கிருகம்.என்னும் வடசொல் வழக்கூன்றவே ,இச்சொல் வழக்கு வீழ்ந்தது.

மணக்குடவர்

குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும். முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்து போய்விடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)மடி இன்மை (Matiyinmai)