குறள் (Kural) - 597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
பொருள்
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
Tamil Transliteration
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru.
மு.வரதராசனார்
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
கலைஞர்
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
பரிமேலழகர்
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.' (புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
களிறு புதை அம்பிற் பட்டுப் பாடு ஊன்றும்-போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும் ; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் -அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர். உவமமும் பொருளுங் கொண்ட அடைகள் இரண்டிற்கும் பொதுவாதலின், ஒல்காமை களிற்றுடனும் பாடூன்றுதல் உரவோருடனுஞ் சென்றியைந்தன. தாம் மேற்கொண்ட வினைக்குத் தடையாகப் பேரிடுக்கண் நேரினும், தளராது தாம் கருதியதை முடிப்பர் என்பது ,உவமத்தாற் பெறப்படும்.முந்தின குறள் ஊழால் தடைப்படும் வினையையும், இக்குறள் இடையூற்றால் தடைப்பட்டு விடா முயற்சியால் வெல்லப் படும் வினையையும் குறித்தன வென வேறுபாடறிக.
மணக்குடவர்
தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல. இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.
புலியூர்க் கேசிகன்
தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊக்கம் உடைமை (Ookkamutaimai) |