குறள் (Kural) - 598

குறள் (Kural) 598
குறள் #598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

பொருள்
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

Tamil Transliteration
Ullam Ilaadhavar Eydhaar Ulakaththu
Valliyam Ennunj Cherukku.

மு.வரதராசனார்

ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

சாலமன் பாப்பையா

ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

கலைஞர்

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

பரிமேலழகர்

உள்ளம் இல்லாதவர் - ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் - இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார். (ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை, வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உள்ளம் இலாதவர்-ஊக்கமில்லாத அரசரும் பெருஞ்செல்வரும்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார் -இவ்வுலகத்தில் யாமே வண்மையுடையேம் என்று மகிழ்வொடு கருதும் பெருமிதம் பெறார். ஊக்கமில்லாதவர்க்கு அதனாலுண்டாகும் முயற்சியும், முயற்சியாலுண்டாகும் பொருளும் ,பொருளாலுண்டாகும் கொடையும் , கொடையாலுண்டாகும் செருக்கும் இல்லையாதலின் , வள்ளிய தீயதுமான இருவகைச் செருக்குள் ,இங்குக் குறித்தது நல்லது என அறிக. "கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே". என்பது தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல், 6).

மணக்குடவர்

உள்ளமிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென்னுங் களிப்பினைப் பெறார். இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள்வரவு இல்லையாம் ஆதலான் அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.

புலியூர்க் கேசிகன்

‘யாம் வள்ளன்மை உடையோம்’ என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஊக்கம் உடைமை (Ookkamutaimai)