குறள் (Kural) - 596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
பொருள்
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
Tamil Transliteration
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu.
மு.வரதராசனார்
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
சாலமன் பாப்பையா
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
கலைஞர்
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
பரிமேலழகர்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் -அரசராயினும் பிறராயினும் தாம் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சி பற்றிய கருத்ததாகவே யிருக்க; மற்று-பின்பு ;அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி ஊழ்வலியால் தவறினும் தவறாத தன்மையதே. உயர்வு தவறினும், உள்ளினவரின் உயரிய நோக்கத்தையும் அவர் செய்த பெருமுயற்சியையும் அறிவுடையோர் பாராட்டுவராதலானும். "தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்." (குறள்.620.) ஆதலானும், ' தள்ளாமை நீர்த்து 'என்றார். உம்மை தள்ளுவதன் அருமை குறித்து நின்றது.
மணக்குடவர்
நினைப்பனவெல்லாம் உயர்வையே நினைக்க: அந்நினைவு முடியாமல் தப்பினும் முயன்று பெற்றதனோடு ஒக்கும். இது தப்பினும் பழிக்கப்படா தென்றது.
புலியூர்க் கேசிகன்
உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | ஊக்கம் உடைமை (Ookkamutaimai) |