குறள் (Kural) - 595

குறள் (Kural) 595
குறள் #595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

பொருள்
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

Tamil Transliteration
Vellath Thanaiya Malarneettam Maandhardham
Ullath Thanaiyadhu Uyarvu.

மு.வரதராசனார்

நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.

சாலமன் பாப்பையா

நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

கலைஞர்

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

பரிமேலழகர்

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் - நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு - அது போல மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி. ('மலர்' ஆகுபெயர். நீர்மிக்க துணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் - பொருள் படைகளான் மிகுதல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மலர் நீட்டம் வெள்ளத்து அனைய -நீர்ப்பூக்களின் காம்பின் நீளம் அவை நிற்கும் நீரின் அளவாகும்; உயர்வு மாந்தர்தம் உள்ளத்து அனையது - அது போல மாந்தரின் வாழ்வுயர்ச்சி அவருடைய ஊக்கத்தின் அளவாகும். உயர்வு அரசர்க்கு நாடு பொருள் படைகளும் பிறர்க்குச் செல்வம் பதவி வினைஞரும் மிகுதலாம். சில மலர்க் காம்புகள் நீர் மட்டத்திற்கு மேலும் நிற்றலால் ,நீரளவாய் நிற்பனவே இங்கு உவமையாவன என அறிக. 'மலர்' ஆகுபொருள். நீரை வெள்ளம் என்பது மலையாள நாட்டு வழக்கமாதலால், திருவள்ளுவர் பண்டைச் சேரநாட்டொடு பழகியிருந்தமை உய்த்துணரப்படும். இதை "இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇயற்று" (குறள்.613) என்னும் உவமமும் வலியுறுத்தும். இக்குறளில் வந்துள்ள அணி எடுத்துக்காட்டுவமை.

மணக்குடவர்

புகுந்த நீரின் அளவினது பூக்களது வளர்ச்சி; அதுபோல மாந்தரது உள்ளத்தின் அளவினது ஊக்கம். இஃது ஊக்கம் இதனானே உண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஊக்கம் உடைமை (Ookkamutaimai)