குறள் (Kural) - 594

குறள் (Kural) 594
குறள் #594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

பொருள்
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

Tamil Transliteration
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai.

மு.வரதராசனார்

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

சாலமன் பாப்பையா

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.

கலைஞர்

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

பரிமேலழகர்

அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும். (அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஆக்கம்-செல்வம்; அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு; அதர்வினாய்ச் செல்லும்- தானாகவே வழி வினவிக்கொண்டு செல்லும். ஊக்க முள்ளவனுக்கு ஆக்கம் எளிதாய்க்கிட்டும் என்பது கருத்து. அசைவின்மை இடுக்கண், மெய்வருத்தம் முதலிய வற்றால் தளராமை. இந்நான்கு குறளாலும், இருக்கின்ற செல்வத்தினும் அதற்கு ஏதுவான ஊக்கம் சிறந்த தென்பது கூறப்பட்டது.

மணக்குடவர்

அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும். நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஊக்கம் உடைமை (Ookkamutaimai)