குறள் (Kural) - 585

குறள் (Kural) 585
குறள் #585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

பொருள்
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

Tamil Transliteration
Kataaa Uruvotu Kannanjaadhu Yaantum
Ukaaamai Valladhe Otru.

மு.வரதராசனார்

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

சாலமன் பாப்பையா

பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

கலைஞர்

சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

பரிமேலழகர்

கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கடாஅ உருவொடு -ஒற்றப்பட்டார் கண்டால் அயிர்க்கப்படாத வடிவொடு பொருந்தி ; கண் அஞ்சாது - அவர் ஒருகால் அயிர்த்து நோக்கி ஆராயத்தொடங்கின் , அவர் சினத்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாது நின்று ; யாண்டும் உகாமை வல்லதே -எவ்விடத்திலும் எவ்வழியைக் கையாளினும் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமை வல்லவனே; ஒற்று - சிறந்த ஒற்றனாவான். கடுத்தல் ,அயிர்த்தல் , என்பன பகைவன் அல்லது ஒற்றன் என்று ஐயுறுதல். கடாத (கடுக்காத ) வடிவாவன;துறவியர் ,வணிகர் , வழிப்போக்கர், இரப்போர் முதலியோர் தோற்றம்; உகுத்தல் சிந்துதல். அது இங்கு மறைவெளியிடுதலைக் குறித்தது, 'கடா' கடு என்னும் வினையடிப்பிறந்த ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். 'கடா அ ' ,'உகாஅமை' இசைநிறை யளபெடைகள்.ஏகாரம் தேற்றம்.'ஒற்று' வடிவால் அஃறிணையாதலின் அஃறிணை முடிவு கொண்டது.

மணக்குடவர்

வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

புலியூர்க் கேசிகன்

சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவே ஒற்றன்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (Otraatal)