குறள் (Kural) - 584

குறள் (Kural) 584
குறள் #584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அ
னைவரையும் ஆராய்வது ஒற்று.

பொருள்
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

Tamil Transliteration
Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu
Anaivaraiyum Aaraaivadhu Otru.

மு.வரதராசனார்

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா

அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

கலைஞர்

ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

பரிமேலழகர்

தம் வினை செய்வார் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது - தம் காரியம் செய்வார் சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே; ஒற்று - ஒற்றனாவான்.('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி. அவனுக்குக்காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார் தன்னிடத்தும் நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன் அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும் முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும்அறிந்து, அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின், இம்மூவகையாரையும்எஞ்சாமல் ஆராய வேண்டும் என்பார், 'அனைவரையும்ஆராய்வது ஒற்று' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வினைசெய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்ற அனைவரையும் ஆராய்வது -அரசியல் வினைஞர், அரசின் உறவின்முறையார் ,பகைவர் என்று சொல்லப்படும் எல்லாரையும் சொற் செயல் பொருட்களால் மறைவாக ஆராய்வானே ; ஒற்று - சரியான ஒற்றனாவான். வினைசெய்வார் முதலிய மூவகுப்பாரும் அரசனுக்குத் தெரியாமலே தன்னாட்டொடும் பகை நாட்டொடும் தொடர்பு கொள்ளக்கூடுமாதலின் ,அவரனைவரையும் மறைவாக ஆராயவேண்டு மென்றார்,'ஆங்கு ' அசைநிலை.

மணக்குடவர்

தமக்குக் காரியமானவற்றைப் பார்த்துச் செய்வாரும் தமக்குச் சுற்றமாயிருப்பாரும் தம்மை வேண்டாதிருப்பாருமாகிய அனைவரையும் ஆராய்ந்தறிவான் ஒற்றனாவன். இவையிரண்டும் ஒற்றவேண்டுமிடங் கூறின.

புலியூர்க் கேசிகன்

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (Otraatal)