குறள் (Kural) - 586

குறள் (Kural) 586
குறள் #586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

பொருள்
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

Tamil Transliteration
Thurandhaar Pativaththa Raaki Irandhaaraaindhu
Enseyinum Sorviladhu Otru.

மு.வரதராசனார்

துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

சாலமன் பாப்பையா

செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

கலைஞர்

ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

பரிமேலழகர்

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து - முற்றும் துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று - ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான். (விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக்கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துறந்தார் படிவத்தார் ஆகி - முற்றத்துறந்த முனிவரின் கோலம்பூண்டு; இறந்து ஆராய்ந்து - புகுதற்குரிய விடமெல்லாம் கோடிவரை உட்புகுந்து ஆராயவேண்டியவற்றை யெல்லாம் ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது -அங்குள்ளவர் அயிர்த்துப் பற்றி நுண்சிதைப்புச் (சித்திரவதை) செய்யினும் வாய் சோர்ந்து தம்மை வெளிப்படுத்தாதவரே ,ஒற்று-சிறந்த ஒற்றராவார். 'துறந்தார் ' என்பது ஒப்புமைபற்றித் திருநீராட்டுச் செலவினையுங் குறிக்கும் .'என் செயினும் என்றது நோவுறுத்தலின் கடுமையை விளக்கி நின்றது. பரிமேலழகர் 'துறந்தார் படிவத்தர் ' என்பதை ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொள்ளாது உம்மைத் தொகையாகக் கொண்டு, முற்றத் துறந்தாராயும் விரதமொழுக்கினராயும்' என்று பொருள் கூறி ,' இதனுட் 'படிவ ' மென்றதனை வேடமாக்கித் துறந்தார் வேடத்தாராகி யென்றுரைப்பாரு முளர்.'. என்று மணக்குடவர், பரிப் பெருமாள்,பரிதியார் , காலிங்கர், ஆகிய நால்வரையும் பழிப்பர்.ஒற்றர் துறவியரின் கோலத்தராக வன்றி உண்மையான துறவியராக இருக்க முடியாது ; இருப்பின் ஒற்றராகமுடியாது. பரிமேலழகர் ' துறந்தாராயும் விரத வொழுக்கின ராயும் ' என்று கூறியது பிராமணரை நோக்கிப் போலும் ! 'துறந்தார்ப் படிவத்தராகி ' என்று தொடங்கியதால் ,'ஒற்று ' என்பது பன்மை குறித்த வகுப்பொருமையாம்.அது தன் அஃறிணை வடிவிற்கேற்ப அத்திணை முடிபுகொண்டது.

மணக்குடவர்

வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

புலியூர்க் கேசிகன்

புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (Otraatal)