குறள் (Kural) - 583

குறள் (Kural) 583
குறள் #583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

பொருள்
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

Tamil Transliteration
Otrinaan Otrip Poruldheriyaa Mannavan
Kotrang Kolakkitandhadhu Il.

மு.வரதராசனார்

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

சாலமன் பாப்பையா

எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

கலைஞர்

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

பரிமேலழகர்

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை. (அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றரால் எல்லார் செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயனை ஆராய்ந்தறியா அரசன் ; கொற்றம் கொளக்கிடந்தது இல் - வெற்றியடையக் கூடிய வேறு வழியில்லை. நிகழ்ந்த செய்திகளையும் அவற்றின் விளைவையும் அறியாத அரசன் ,திடுமென்று பகைவரால் தாக்கப்படின் வெற்றியடைதற்கு வழியில்லை யாதலின், 'கொற்றங்கொளக் கிடந்ததில் ' என்றார். இதைக் கொளக்கிடந்தது கொற்றமில்லை எனச் சொன்முறைமாற்றி தோல்வியின்றிக் கொள்ளக்கிடந்ததொரு வெற்றியில்லை என்றுரைப்பினுமமையும்.

மணக்குடவர்

ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று

புலியூர்க் கேசிகன்

பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர்மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (Otraatal)