குறள் (Kural) - 582

குறள் (Kural) 582
குறள் #582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

பொருள்
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

Tamil Transliteration
Ellaarkkum Ellaam Nikazhpavai Egngnaandrum
Vallaridhal Vendhan Thozhil.

மு.வரதராசனார்

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

சாலமன் பாப்பையா

பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

கலைஞர்

நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

பரிமேலழகர்

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில். ('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல் அறிதல் -எல்லாரிடத்தும் நிகழ்பவை யெல்லா வற்றையும் எப்போதும் ஒற்றால் விரைந்து அறிதல் ; வேந்தன் தொழில் - அரசன் கடமையாம். ' எல்லார்க்கும் ' முத்திறத்தாரையும். இது நான்காம் வேற்றுமை ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம் . 'எல்லாம் ' என்றது சொல் செயல் பொருள் மூன்றையும் குறிக்கும்.இடையறாது நிகழ்தலால் 'எஞ்ஞான்றும் ' என்றும், உடனுடன் நட்போ பகையோ பூணவும் கொடையோ தண்டமோ நிகழ்த்தவும் விரைந்து செய்திகளை யறியவேண்டுமாதலின் ' வல்லறிதல் ' என்றும் கூறினார். ஒற்றல் என்பது அதிகாரத்தால் வந்தது.

மணக்குடவர்

பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க் கும், அவர் சுற்றத்திற்கும், தஞ்சுற்றத்திற்கும் அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை யெல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்தறிதல் வேந்தனது தொழில்.

புலியூர்க் கேசிகன்

எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (Otraatal)