குறள் (Kural) - 557

குறள் (Kural) 557
குறள் #557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

பொருள்
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

Tamil Transliteration
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku.

மு.வரதராசனார்

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

சாலமன் பாப்பையா

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

கலைஞர்

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.

பரிமேலழகர்

துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது.மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துளியின்மை ஞாலத்திற்கு எற்று - மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ ; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அத்தகையதே அரசனின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்குந் துன்பமும் ஆகும். "வானோக்கி வாழு முலகெல்லாம்" என்னுங் குறள் (542) இங்கு எதிர்மறை முகத்தால் ஒரு புது வலிமை பெறக் கூறப்பட்டது . இலை யென்பது சிறப்பாக வாழையிலையைக் குறித்தல் போல், துளி யென்பது இங்கு மழைத்துளியைக் குறித்து மழையென்னும் பொருளில் ஆகுபெயராக நின்றது . உயிர் என்றது இங்குக் குடிகளை. 'ஞாலம்' ஆகுபெயர் . என்னது - எற்று . (என் + து ) . அன்னது - அற்று (அன் + து ) . ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர்

உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது; அத்தன்மைத்து, அரசன் அருளிலனாதால் அவன் கீழ் வாழும் மக்கட்கு. இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)