குறள் (Kural) - 556

குறள் (Kural) 556
குறள் #556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

பொருள்
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

Tamil Transliteration
Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli.

மு.வரதராசனார்

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா

ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

கலைஞர்

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

பரிமேலழகர்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா. (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோலாட்சியினாலேயே ; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோ லாட்சியில்லாவிடின் அவர்க்கு இம்மையிலும் பெயரும் மதிப்பும் இல்லாமற் போம். ஒளி யென்பது ஒருவன் தான் வாழுநாளில் எல்லாராலும் மதிக்கப்படும் மதிப்பு. அது பெரும்பாலும் வாய்ச்சொல்லாக நிகழ்வது , புகழ் என்பது ஒருவன் இறந்த பின்பு எல்லாராலும் உயர்த்துச் சொல்லப்படும் உயர்வு . அது பெரும்பாலும் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இலக்கிய வடிவில் திகழ்வது. "உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்" என்னும் நாலடிச் செய்யுளை ( 6 ) நோக்குக . மன்னுதல் இரண்டனுள் முன்னது நிலைபெறுதல் ; பின்னது பொருந்துதல் . கல்வி , கொடை வெற்றி முதலியனவாக ஏதுக்கள் பலவாதலின் , அவற்றினால் வரும் ஒளி புகழ்களும் பலவாயின . 'மன்னாவாம்' என்பதிலுள்ள ஆக்கச்சொல் முன்னுஞ் சென்று இயையும் . செங்கோன்மையால் என்னும் மூன்றாம் வேற்றுமையுருபும் ஒளியும் என்னும் எச்சவும்மையும் தொக்கன . நிலைபெறுதல் (மன்னுதல்) என்றது புகழ்நிலை பெறுதலை.

மணக்குடவர்

அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம். முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

புலியூர்க் கேசிகன்

செங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)