குறள் (Kural) - 558

குறள் (Kural) 558
குறள் #558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

பொருள்
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

Tamil Transliteration
Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin.

மு.வரதராசனார்

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

கலைஞர்

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.

பரிமேலழகர்

முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது. (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப்படின் - முறை (நீதி ) செய்யாத அரசனின் கொடுங்கோலாட்சியின் கீழ்வாழின் ; உடைமை இன்மையின் இன்னாது - இன்பந்தரவேண்டிய செல்வநிலை துன்பந்தரும் இயல்புள்ள வறுமையினும் துன்பமான தாம். உடல் வருந்தப் பாடுபட்டுத் தேடிய செல்வத்தைக் கொடுங் கோலரசன் எளிதாய்க் கேட்டமட்டிற் கொடாவிடின், சிறைகாவற்கும் நையப்புடைப்பிற்கும் மட்டுமன்றிக் கொலைத் தண்டத்திற்கும் ஆளாக நேருமாதலின் , இன்னாமையில் தன்னேரில்லா இன்மையும் கொடுங்கோல் நாட்டில் உடைமையின் இனிய தென்றார்.

மணக்குடவர்

நல்குரவினும் செல்வம் துன்பமாகும்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின். இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின

புலியூர்க் கேசிகன்

முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)