குறள் (Kural) - 555

குறள் (Kural) 555
குறள் #555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

பொருள்
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

Tamil Transliteration
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai.

மு.வரதராசனார்

(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.

சாலமன் பாப்பையா

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

கலைஞர்

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

பரிமேலழகர்

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அல்லல் பட்டு ஆற்றது அழுத கண்ணீர் அன்றே - குடிகள் அரசனது கொடுங்கோலாட்சியால் துன்பப்பட்டு அதைப்பொறுக்க முடியாது அழுத கண்ணீரன்றோ ; செல்வத்தை தேய்க்கும் படை - அவ்வரசனின் ஆட்சிச் செல்வத்தை அழிக்கும் படைக்கலம். கொடுங்கோலரசன் கொடுமையைக் குடிகளின் ஆற்றொணாத் துயரநெஞ்சே போக்கிவிடும் . அதற்கு வேற்றரசன் வினைவேண்டியதில்லை யென்பது கருத்து . செல்வத்தை யழிப்பது துயரநெஞ் சேயாயினும், அதை வெளிப்படையாகத் தெரிவிப்பது கண்ணீராதலால் , அழிப்புவினை கண்ணீரின்மே லேற்றப்பட்டது . செல்வத்தை மரமாக உருவகியாமையின் இது ஒருமருங் குருவகம் . ஏகாரம் வினா . எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் . ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்து விடுவான் என்பது கருத்து.

மணக்குடவர்

நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது இவ்வரசன் கெடுமென்றது.

புலியூர்க் கேசிகன்

கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)