குறள் (Kural) - 554

குறள் (Kural) 554
குறள் #554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

பொருள்
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

Tamil Transliteration
Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich
Choozhaadhu Seyyum Arasu.

மு.வரதராசனார்

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

சாலமன் பாப்பையா

மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

கலைஞர்

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

பரிமேலழகர்

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான். வறட்சிக்காலத்து மக்கள் வானை ஆவலாக எதிர்நோக்குவது போல், கொடுங்கோலரசன் குடிகளும் செங்கோலரசனொருவன் வரவை எதிர்பார்ப்பராதலின், அத்தகைய அரசன் அக்கொடுங்கோலனை எளிதில் வென்று அவன் நாட்டைக் கைப்பற்றுவன் என்பதாம் . கூழ் என்றது தன் முன்னோருந்தானும் தேடிய பொருளை. குடியை இழப்பதனால் , அவரிடத்தினின்று இனிப் பெறக்கூடிய பொருளைமட்டு மன்றி அவரையாளும் ஆட்சியையே இழந்துவிடு பவனாவன்.

மணக்குடவர்

பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன். இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)