குறள் (Kural) - 553

குறள் (Kural) 553
குறள் #553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

பொருள்
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

Tamil Transliteration
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum.

மு.வரதராசனார்

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

சாலமன் பாப்பையா

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.

கலைஞர்

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

பரிமேலழகர்

நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது.இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் - தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறை செய்யாத அரசன் ; நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடிழப்பான். நாள்தொறும் நாடிழத்தலாவது, "கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் .......................................... நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து வதால்" . (சிலப். 11:60 - 45) வரவர வளங்குன்றுதலும் , குடிகளின் அரசப்பற்றுக் குறைதலும், பகைவரால் அல்லது அருள்பூண்ட செங்கோலரசராற் சிறிது சிறிதாக நிலங்கைப்பற்றப் பெறுதலுமாம் . நாடு அரசிற்கு உறுப்பாகலின், சினைவினை முதல்மேல் நின்றது. "குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து , அதற்குத் தக முறைசெய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும் என்றவாறு" , என்பது மணக்குடவருரை .

மணக்குடவர்

குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும். இது நாடு கெடுமென்றது.

புலியூர்க் கேசிகன்

நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)