குறள் (Kural) - 552

குறள் (Kural) 552
குறள் #552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

பொருள்
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

Tamil Transliteration
Velotu Nindraan Ituven Radhupolum
Kolotu Nindraan Iravu.

மு.வரதராசனார்

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.

கலைஞர்

ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.

பரிமேலழகர்

வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால்இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கோலொடு நின்றான் இரவு - கொலைவரைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தாங்கிய ஆட்சியொடு கூடிய அரசன் குடிகளிடம் பொருள் வேண்டுதல் ; வேலொடு நின்றான் இடு என்றது போலும் - கொல்லும் வேலை ஏந்திநின்ற வழிப்பறிக்கள்வன் வழிச்செல்வானை நோக்கி உன்கைப்பொருளைக் கீழே வை என்று சொல்வதனோ டொக்கும். அரசன் குடிகளிடம் அச்சுறுத்திக் கேளாவிடினும் ; குடிகள் கொடாவிடின் தப்பாது தண்டிக்கப்படுவர் . என்னும் குறிப்பிருத்தலால் , அவன் இரப்பதும் வழிப்பறிக்கள்வன் ஏவல் போன்றதே யென்றார் . 'வேலொடு நின்றான்' என்பதனால் வழிப்பறிக்கள்வன் தனியன் என்பதும் , 'இடு' என்னும் ஏவலொருமையால் வழிச்சொல்வோன் ஒன்றியென்பதும் , 'இரவு' என்றதனால் கொடுங்கோல் அரசன் இரப்பது குடிகள் முறைப்படி செலுத்தவேண்டிய புரவுவரியன்றென்பதும் பெறப்படும்.

மணக்குடவர்

தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.

புலியூர்க் கேசிகன்

அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை (Kotungonmai)