குறள் (Kural) - 547

குறள் (Kural) 547
குறள் #547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

Tamil Transliteration
Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin.

மு.வரதராசனார்

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

சாலமன் பாப்பையா

ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.

கலைஞர்

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

பரிமேலழகர்

வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வையகம் எல்லாம் இறை காக்கும் - உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ; முட்டாச் செயின் அவனை முறைகாக்கும் - முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும். முட்டில்லாமற் செய்தல் மனு முறைச் சோழன் தன்மகனை முறை செய்ததும், கொற்கைப் பாண்டியன் தன்கை குறைத்ததும் , போல்வதாம் . இனி, சிக்கலான வழக்குக்களைத் தீர்க்கும் வழியை இறைவனிடம் மன்றாடிக் கேட்டறிந்ததும் , முட்டாது செய்தலின் பாற்படும் . 'வையகம்' முதலாகுபெயர் . 'முட்டா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

மணக்குடவர்

அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (Sengonmai)