குறள் (Kural) - 548

குறள் (Kural) 548
குறள் #548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

Tamil Transliteration
Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan
Thanpadhaththaan Thaane Ketum.

மு.வரதராசனார்

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

சாலமன் பாப்பையா

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

கலைஞர்

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

பரிமேலழகர்

'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை ( நியாயம் ) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து , அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து , உண்மைக் கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன் ; தண்பதத்தான் தானேகெடும் - தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான். "அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்" (சிலப்பதிகாரப் பதிகம் . 55) என்றதற் கேற்ப , முறை செய்யா அரசன் பகைவரின்றியுந் தானே கெடுவான் என்பதாம் . பதம் நிலைமை . எண்மை எளிமை. 'எண்பதத்தான்' குறிப்பு முற்றெச்சம் . 'ஓரா' செய்யா என்னும் வாய்ப்பாட்டு (இறந்தகால வுடன்பாட்டு ) வினையெச்சம் . 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 'தண்பதம்' பழியும் பளகும் (பாவமும் ) அடைந்து நிற்கும் நிலை . ஏகாரம் பிரிநிலை.

மணக்குடவர்

எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.

புலியூர்க் கேசிகன்

முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய், அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (Sengonmai)