குறள் (Kural) - 546

குறள் (Kural) 546
குறள் #546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

Tamil Transliteration
Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin.

மு.வரதராசனார்

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

சாலமன் பாப்பையா

ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

கலைஞர்

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

பரிமேலழகர்

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)

ஞா.தேவநேயப் பாவாணர்

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று , அவன் அரசாட்சியே ; அதுவும் கோடாது எனின் - அவ்வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறிதவறாதிருந்த பொழுதே. "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்றார் மதுரை மருதனிளநாகனார் ( புறம் . 55) . வெற்றிதருவது வேலன்று கோல் என்னும் எதுகை நயமும் , எறியும் வேலன்று ஏந்தும் கோலே யென்னும்முரண்நயமும் , கவனிக்கத்தக்கன . அதூஉம் இன்னிசை யளபெடை . மணக்குடவர் 'கோடா னெனின்' என்று பாடங்கொள்வர் . அப்பாடத்திற்கு , கருவியின் வினை சினைவினை போல முதல் வினைமேல் நின்றதாகக் கொள்க . 'கோல் அதூஉம்' என்பது போன்றே , 'இல்வாழ்க்கை அஃதும்' ( 46) என்னும் தொடரும் அமைந்திருத்தலை , ஒப்புநோக்கி யுணர்க.

மணக்குடவர்

அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (Sengonmai)