குறள் (Kural) - 545

குறள் (Kural) 545
குறள் #545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

Tamil Transliteration
Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku.

மு.வரதராசனார்

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா

அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

கலைஞர்

நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

பரிமேலழகர்

பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். ('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு திரண்டு ; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் உள்ளனவாம். 'கோலோச்சும்', 'மன்னவன்' என்பனவற்றிற்கு முன்பு உரைத்த வாறு உரைக்க . செங்கோலரசன் மண்ணுலகில் இறைவனின் படிநிகராளியா யிருத்தலால் , இயற்கையும் அவனுக்கு அடங்கி நடக்கும் என்பதாம்.

மணக்குடவர்

மழைபெய்தலும் விளைதலுங்கூடி. நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்தவல்ல அரசனது நாட்டகத்தினவாம். இது மேற்கூறிய முறைமைசெய்ய மழையும் விளைவும் உண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (Sengonmai)