குறள் (Kural) - 544

குறள் (Kural) 544
குறள் #544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

Tamil Transliteration
Kutidhazheeik Kolochchum Maanila Mannan
Atidhazheei Nirkum Ulaku.

மு.வரதராசனார்

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

சாலமன் பாப்பையா

குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.

கலைஞர்

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

பரிமேலழகர்

குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். (அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும் , அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை ; உலகு தழீஇ நிற்கும் - நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும். அன்பாக அரவணைத்துக் காக்கும் அரசனைக் குடிகளும் அன்பாகப் போற்றிநிற்பர் என்பது கருத்து. அணைத்தல் இன்சொற் சொல்லுதலும் தளர்ந்த விடத்து வேண்டுவன கொடுத்துத் தாங்குதலும் . மாநில மன்னன் மூவேந்தருள் ஒருவனான பெருநில வரசன் . குறு நில மன்னர் , பெருநில மன்னர் என அரசர் இருதிறத்தினராதலால் , வேந்தனை மாநில மன்னன் என்றார் . கோல் , உலகு என்பன ஆகுபெயர் . கோல் என்ற தற்கேற்பச் சிறப்பாக ஆளுதலை ஓச்சுதல் என்றார் . ஓச்சுதல் உயர்த்துதல் . குடி என்றது தளர்ந்த குடிகளை , 'தழீஇ' இன்னிசையளபெடை.

மணக்குடவர்

குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.

புலியூர்க் கேசிகன்

குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)செங்கோன்மை (Sengonmai)