குறள் (Kural) - 489

குறள் (Kural) 489
குறள் #489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

பொருள்
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

Tamil Transliteration
Eydhar Kariyadhu Iyaindhakkaal Annilaiye
Seydhar Kariya Seyal.

மு.வரதராசனார்

கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா

அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

கலைஞர்

கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

பரிமேலழகர்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க. (ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு வாய்த்தற்கரிய சமையம் வந்து சேரின் ; அந்நிலையே - அப்போதே ; செய்தற்கு அரிய செயல் - அது வரை செய்தற்கு அரிதாயிருந்த வினைகளைச் செய்துவிடுக . தானாக நேர்ந்தாலொழிய எவ்வகையாலும் பெறப்படாமையின் , 'எய்தற்கரியது' என்றும் , அதுநேர்வது அரிதாகலின் 'இயைந்தக்கால் 'என்றும் , அது நீடித்து நில்லாமையின் 'அந்நிலையே' என்றும் , அது நேராதவிடத்துச் செய்தற் கியலாமையின் 'செய்தற்கரிய' என்றும் , கூறினார் . ஏகாரம் பிரிநிலை .

மணக்குடவர்

பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.

புலியூர்க் கேசிகன்

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)