குறள் (Kural) - 490

குறள் (Kural) 490
குறள் #490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

Tamil Transliteration
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu.

மு.வரதராசனார்

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

கலைஞர்

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

பரிமேலழகர்

கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க. (மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் குத்து ஒக்க என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் .ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும்இலக்கணம் கூறியவாறாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேல் செல்லாதிருக்குங் காலத்து மீன்தேடுங் கொக்குப்போல் ஒடுங்கியிருக்க ; மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - மற்றுச் செல்லுங்காலம் வாய்த்த விடத்து அக்கொக்கு விரைந்து மீனைக்கொத்துவதுபோல் விரைந்து பகைவனைத் தாக்குக . கூம்புதல் குவிதல் . குவிதல் ஒடுங்குதல் . மலரின் ஒடுக்கம் அரசரின் வினையொடுக்கத்திற்கு உவம மாயிற்று . 'ஓடுமீனோடியுறு மீன் வருமளவும் - வாடியிருக்குமாங் கொக்கு' ( மூதுரை , 16) தனக் கேற்ற மீன்வரும்வரை அது முன்னறிந்து தப்பாமைப் பொருட்டுத் தவஞ்செய்வான் போல் அசைவற்று நிற்றலும் , அது வந்தவுடனே திடுமென்று கொத்துதலும் , அரசன் காலம் வரும்வரை பகைவர் ஐயுறாவாறு அமைந்திருத்தற்கும் அது வந்தவுடன் விரைந்து வினைமுடித்தற்கும் . சிறந்த வுவமமாயின . இதனால் இருப்பு வினைகளின் இயல்பும் விளக்க மாயின

மணக்குடவர்

காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க. இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து; காலம் வாய்த்த போதில் கொக்கு மீனைக் குத்தினாற் போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)