குறள் (Kural) - 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பொருள்
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Serunaraik Kaanin Sumakka Iruvarai
Kaanin Kizhakkaam Thalai.
மு.வரதராசனார்
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.
கலைஞர்
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர். ('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
செறுநரைக் காணின் சுமக்க - அரசர் தம்மினும் வலிய பகைவரைக் காணநேர்ந்தால் அவருக்கு நற்காலம் உள்ள வரை அவருக்குத் தாழ்ந்து பணிக ; இறுவரை காணின்தலை கிழக்கு ஆம் - அவர்க்கு முடிவுக்காலம் வரின் தலைகீழாக விழுந்து மாய்வர் . பகைவரின் பகைமை யொழியும் வகை அவரைத்தலைமேற் சுமந்தாற்போல் மிகவுந் தாழ்ந்து பணிகவென்பார் சுமக்க என்றும் , அதனால் அவர் தம்மைக் காவாது நெருங்கிப்பழகுவராதலாற் காலமறிந்து தாக்கின் அவர் தப்பாது கெடுவரென்பார் 'கிழக்காந்தலை' என்றும் கூறினார் . பணிதலைத் தலைமேற் சுமத்தலாகக் குறித்தமையால் , பணியாது கொல்லுதலைத் தலைகீழாக விழுந்து சாகுமாறு தலையினின்று தள்ளுதலாகக் குறித்தார் . இவ்விரு குறள்களாலும் காலம் வரும்வரை பகைமை தோன்றாமலிருக்குமாறு கூறப்பட்டது . கீழ் - கீழ்க்கு - கிழக்கு .
மணக்குடவர்
பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.
புலியூர்க் கேசிகன்
தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | காலமறிதல் (Kaalamaridhal) |