குறள் (Kural) - 487

குறள் (Kural) 487
குறள் #487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

Tamil Transliteration
Pollena Aange Puramveraar Kaalampaarththu
Ulverppar Olli Yavar.

மு.வரதராசனார்

அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

சாலமன் பாப்பையா

தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

கலைஞர்

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

பரிமேலழகர்

ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர். ('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒள்ளியவர் - தெளிந்த அறிவுடைய அரசர் ; ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார் ; காலம் பார்த்து உள்வேர்ப்பர் - அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர் . 'பொள்ளென' என்பது விரைவுக் குறிப்பிடைச்சொல் வேர்த்தல் சினத்தாற் புழுங்குதல் . அது இங்குச் சினத்தைக் குறித்தலால் கரணியம் (காரணம்) கருமியமாக (காரியமாக) ச் சார்த்திக் கூறப்பட்டது . வெளிப்படையாய்ச் சினங்கொள்ளின் பகைவர் தம்மைக் காத்துக் கொள்வராதலாலும் , துணைவலியொடு திடுமெனவந்துதாக்கலாமாதலாலும் , 'புறம்வேரார் 'என்றும் , சினம் அடியோடு தணியின் போருக்கு வட்டங்கூட்டுதல் (ஆயத்தஞ் செய்தல்) நிகழா தாதலின் 'உள்வேர்ப்பர் 'என்றும் கூறினார்

மணக்குடவர்

கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனமொப்பர் ஒள்ளியர். ஒப்புப் பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)