குறள் (Kural) - 484

குறள் (Kural) 484
குறள் #484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

பொருள்
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

Tamil Transliteration
Gnaalam Karudhinung Kaikootung Kaalam
Karudhi Itaththaar Seyin.

மு.வரதராசனார்

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

கலைஞர்

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

பரிமேலழகர்

ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் ; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குரிய வினையை அவன் தகுந்த கால மறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின் . வினை பெரிதாதலின் இடமும் வேண்டியதாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு .

மணக்குடவர்

உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

புலியூர்க் கேசிகன்

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)