குறள் (Kural) - 483

குறள் (Kural) 483
குறள் #483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.

பொருள்
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

Tamil Transliteration
Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin.

மு.வரதராசனார்

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

சாலமன் பாப்பையா

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

கலைஞர்

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

பரிமேலழகர்

அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கருவியான் காலம் அறிந்து செயின் - சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; அருவினை என்ப உளவோ - அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ ? இல்லை . கருவிகள் ஐவகையாற்றலும் நால்வகை ஆம்புடைகளுமாம் . அவற்றொடு காலமும் வேண்டுமென்பதற்குக் 'கருவியான்' என்றார் . 'உளவோ' என்னும் வினா எதிர்மறை விடையை அவாவுவது .

மணக்குடவர்

அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

புலியூர்க் கேசிகன்

ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)