குறள் (Kural) - 482

குறள் (Kural) 482
குறள் #482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

பொருள்
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

Tamil Transliteration
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru.

மு.வரதராசனார்

காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

சாலமன் பாப்பையா

காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

கலைஞர்

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

பரிமேலழகர்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)'

ஞா.தேவநேயப் பாவாணர்

காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

மணக்குடவர்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல் ; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம் . காலத்தொடு பொருந்துதல் காலந்தவறாமற் செய்தல் . 'தீராமை 'என்றதனால் தீருந்தன்மைய தென்பது பெறப்படும் . வினைகள் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் ஒரு போதும் நீங்கா தென்பது கருத்து .

புலியூர்க் கேசிகன்

காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)காலமறிதல் (Kaalamaridhal)