குறள் (Kural) - 478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
பொருள்
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
Tamil Transliteration
Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai.
மு.வரதராசனார்
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
சாலமன் பாப்பையா
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
கலைஞர்
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
பரிமேலழகர்
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் ; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து ; கேடு இல்லை - கெடுதல் இல்லை . இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது . அளவு என்பது பின்னுங் கூட்டியுரைக்கப் பட்டது . 'அகலாக்கடை 'என்றதனால் , வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம் . ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர்வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக்குளநீர் குன்றாது என்பதே, பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்ட இக்குறட்பொருள்.
மணக்குடவர்
பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
புலியூர்க் கேசிகன்
வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | வலியறிதல் (Valiyaridhal) |