குறள் (Kural) - 479

குறள் (Kural) 479
குறள் #479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருள்
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

Tamil Transliteration
Alavara?ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola
Illaakith Thondraak Ketum.

மு.வரதராசனார்

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

கலைஞர்

இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

பரிமேலழகர்

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும். (அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில் ; உளபோல இல் ஆகித்தோன்றாக் கெடும் - அவன் பல்வகைப் பட்ட பொருள்களும் உள்ளனபோலத்தோன்றி உண்மையில் இல்லாதனவாய்ப் பின்பு அப்பொய்த்தோற்றமும் இல்லாது அழியும் . அளவறிந்து வாழ்தலாவது , செலவை வரவிற்குச் சுருக்காவிடினும் அதற்கு ஒப்பவாவது செய்து ஈந்தும் நுகர்ந்தும் வாழ்தல் . தொடக்கத்திற்கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல இல்லாகி 'என்றார் . "முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் செலினே." (புறம் . 110) என்பது ஒருவாறு இக்குறட்கு எடுத்துக்காட்டாம் .

மணக்குடவர்

தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.

புலியூர்க் கேசிகன்

தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)வலியறிதல் (Valiyaridhal)