குறள் (Kural) - 412

குறள் (Kural) 412
குறள் #412
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

Tamil Transliteration
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum.

மு.வரதராசனார்

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

கலைஞர்

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

பரிமேலழகர்

செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார்.ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செவிக்கு உணவு இல்லாத போழ்து-செவியுணவாகிய கேள்வியறிவிற்கு இடமில்லாத பொழுது; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்-தீப்போலும் பசியால் வாட்டும் வயிற்றிற்கும் ஒரு சிறிது உணவு இடப்படும். கேள்வியறிவு பண்பட்ட மக்கட்குச் சுவைமிக்கதாயும் மறுமைக்கும் பயன்படுவதாயும் அருகியே வாய்ப்பதாயுமிருத்தலால், 'இல்லாத போழ்து' என்றும், பேருணவாயின் சோம்பலும் தேடற்றுன்பமும் நோயுங் காமமும் மிகுதலால் 'சிறிது' என்றும், அதுவும், "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" (புறம்.18), "உடம்பா ரழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்" (திருமந். 724) ஆதலால் பின்னும் உடம்போடிருந்து கேட்டற்பொருட்டு 'ஈயப்படும்' என்று சிறிது இழிவு தோன்றவும் கூறினார். உம்மை இழிவு கலந்த இறந்தது தழுவிய எச்சவும்மை.

மணக்குடவர்

செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும். பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான், சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு மென்றது

புலியூர்க் கேசிகன்

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கேள்வி (Kelvi)