குறள் (Kural) - 413

குறள் (Kural) 413
குறள் #413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

பொருள்
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

Tamil Transliteration
Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin
Aandraaro Toppar Nilaththu.

மு.வரதராசனார்

கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

சாலமன் பாப்பையா

செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

கலைஞர்

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

பரிமேலழகர்

செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செவிஉணவின் கேள்வி உடையார் -செவியுணவாகிய கேள்வியறிவினையுடையார்; நிலத்து அவிஉணவின் ஆன்றாரோடு ஒப்பர்-நிலவுலகில் வாழ்வாராயினும் அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவரை யொப்பர். செவியுணவின் கேள்வி என்பதிலுள்ள இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. தேவர் அறிவுடையர் என்னுங் கருத்தால் ஆன்றோர் என்னப் பெற்றார். கேள்வியறிவினையுடையார் துன்பமின்றியின்பமே நுகர்தலால் தேவருக்கொப்பாகக் கூறப்பட்டார்.

மணக்குடவர்

செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

புலியூர்க் கேசிகன்

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கேள்வி (Kelvi)