குறள் (Kural) - 411

குறள் (Kural) 411
குறள் #411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

பொருள்
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

Tamil Transliteration
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai.

மு.வரதராசனார்

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

சாலமன் பாப்பையா

செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

கலைஞர்

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

பரிமேலழகர்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்-ஒருவனுக்குச் சிறந்த செல்வமானது கேள்வியறிவாகிய செல்வம்; அச் செல்வம் செல்வத்துள் எல்லாம்தலை-அச்செல்வம் எல்லாச் செல்வங்களுள்ளும் தலைமையான தாகலான். செல்வங்கள் இருவகையும் மூவகையும் எண்வகையுமாகச் சொல்லப்படுவன. கல்வியுங் கேள்வியொடு தொடர்புடையதாய் அதனுளடங்குதலின், 'செல்வத்து ளெல்லாந்தலை' என்றார். 'கேடில் விழுச்செல்வம்' கல்வியென்பதும், 'மாடல்ல மற்றையவை' என்பதும் முன்னரே கூறப்பட்டன.

மணக்குடவர்

ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.

புலியூர்க் கேசிகன்

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கேள்வி (Kelvi)