குறள் (Kural) - 395

குறள் (Kural) 395
குறள் #395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

பொருள்
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

Tamil Transliteration
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar
Kataiyare Kallaa Thavar.

மு.வரதராசனார்

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா

செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

கலைஞர்

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

பரிமேலழகர்

உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர். (உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் -செல்வர்முன் வறியர்போல் தாமும் ஆசிரியன்முன் ஆசையால் தாழ்ந்துநின்று கல்விகற்றவரே தலையானவ ராவர்; கல்லாதவர் கடையரே -அங்ஙனந் தாழ்ந்து நிற்றற்கு நாணிக் கல்லாது விட்டவர் என்றுங் கடைப்பட்டவரே. "உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்று" என்பது, பொருளுங் கல்வியும் இருவகைச் செல்வம் என்பதை யுணர்த்தும்.அதனால் ஆசிரியனுக்குப் பணிவிடையும் பொருளுதவியும் செய்வது மாணவன் கடமையென்பதும் பெறப்படும். "உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" என்பது பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு. (புறம். 183). 'கடையர்' என்பதன் மறுதலையான தலையானவர் என்னுஞ்சொல் தொக்கு நின்றது. மாணவநிலைக்கு ஏற்காத மானம் பற்றிக் கல்வியை யிழந்த கண்ணிலியர், காலமெல்லாங் கண்ணியமும் இன்பமுமின்றிப் பிறந்த நாட்டிலேயே பேரிடர்ப்படுவராதலால், கடையரேயென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார். இனி, இக்குறளின் முதலடிக்கு, உடையார் - இப்பொழுது கல்வியுடைவராயிருப்பவர்; முன் - தாம் கல்வியுடையவராதற்குமுன்; இல்லார்போல் ஏக்கற்றுக் கற்றார் - வறுமைப்பட்டவர் எவ்வாறு பலதுன்பங்களுக் குள்ளாவார் களோ அவ்வாறு வருத்தப்பட்டுக் கற்றவரே யாவர் என்று கூறும் உரையும் ஒன்று உளது ( ந . சி. கந்தையா பிள்ளை).

மணக்குடவர்

பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது.

புலியூர்க் கேசிகன்

செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)கல்வி (Kalvi)